சனி, 7 மே, 2011

சோதனை கனிமொழிக்கா? தி.மு.க வுக்கா? ஒத்திவைக்கப்பட்ட கனிமொழி கைது?




”நீதிமன்றத்தை நான் மதிக்கிறேன். நீதிமன்றம் எடுக்கும் எந்த முடிவையும் நான் மதித்து நடப்பேன்…”
”நான் பெண் என்பதற்காக எந்தச் சலுகையும் காட்டக்கூடாது எனக் கருதுகிறேன் ..”
” நான் இதுவரை முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யவில்லை”
இதெல்லாம் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதற்கு டெல்லிக்கு வந்திருந்த எம்.பி.யான கனிமொழி செய்தியாளர்களிடம்   பேசியவை.
ஆனால் மறுநாளே சூழ்நிலை மாறிவிட்டது. சிறப்பு நீதிமன்றத்தில் அவர் ஆஜரான அன்றே கூடுதல் குற்றப் பத்திரிகையில் சேர்க்கப்பட்டிருந்த கனிமொழியை சி.பி.ஐ கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் தாக்கல் செய்யப்பட்டது. கனிமொழி சார்பில் மூத்த வழக்கறிஞரும், பா.ஜ.க.வைச் சேர்ந்தவருமான ராம்ஜேட்மலானி ஆஜராகி வாதாடியிருப்பது கட்சியைத் தாண்டி இந்த வழக்கு போயிருப்பதைக் காட்டியிருக்கிறது. (தொழில் தர்மம் என்று சொல்லப்பட்டாலும் – கனிமொழிக்காக வாதாட வேறு வழக்கறிஞரே இல்லையா? அல்லது மாற்றான் தோட்டத்து மல்லிகையா?)
முன்பெல்லாம் ஆ.ராசாவுக்கும் அலைக்கற்றை ஊழலுக்கும் சம்பந்தமில்லை என்றும் தலித் என்பதால் அவர் மீது  வீண்பழி சுமத்தப்படுகிறது என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்த தி.மு.க.வின் வாதத்தை மீறுகிற வகையில் கனிமொழிக்காக ஆஜரான வழக்கறிஞரே ”அலைக்கற்றை முறைகேட்டிற்கு அப்போதைய தொலைத் தொடர்புத்துறை அமைச்சரான ஆ.ராசாவே காரணம். அதில் கனிமொழிக்கு எந்தத் தொடர்பும் கிடையாது” என்று வாதாடியது அரசியல் விசித்திரம். தன்னுடைய மகளுக்கு ஒரு நெருக்கடி வந்ததும் ஆ.ராசாவைக் கைகழுவ தி.மு.க தயாராகி விட்டதையே இது உணர்த்துகிறது. (தகத்தாய.. உதாரணம் எல்லாம் என்னாச்சு? )

முன்பு ஆ.ராசா மீது எதிர்க்கட்சிகள் வீண்பழி சுமத்துவதாகக் குற்றம்சாட்டிய தி.மு.க அதே குற்றச்சாட்டை நீதிமன்றத்திற்கு முன்னால் சுமத்தியிருப்பதற்கு என்ன அர்த்தம்?
லஞ்சம் கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஆசிப் பால்வா கைது செய்யப்பட்டிருக்கும் போது,  லஞ்சத்தை வாங்கியதாகக் குற்றம் சாட்டப்படும் கனிமொழியை சி.பி.ஐ  விட்டுவிடக் கூடாது என்று பல்வா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடியதிலிருந்து பல விஷயங்கள் வெளிவர ஆரம்பித்திருக்கின்றன.
சனிக்கிழமை அன்று நீதிமன்றத்தில் வாதாடிய சி.பி.ஐ கனிமொழிக்கும் கலைஞர் டிவிக்குமான பல தொடர்புகளை உறுதிப்படுத்தியிருக்கிறது. எந்த ஆவணங்களும் இல்லாமல் கலைஞர் டிவிக்கு பணம் கைமாறியிருப்பதாகக் கூறியிருப்பதுடன் கனிமொழிக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என்று வாதாடியிருக்கிறது.
கலைஞர் டிவிக்கு வழங்கப்பட்ட பணம் தொடர்பாகப் போலியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறது சி.பி.ஐ. இது வரை குற்றப்  பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்ட பால்வா உள்ளிட்ட பலருக்கு முன்ஜாமீன் மறுக்கப்பட்டிருக்கிற நிலையில் கனிமொழிக்கு மட்டும் முன்ஜாமீன் வழங்கினால் உச்சநீதிமன்றத்தின் கேள்விக்கு சி.பி.ஐ ஆளாக வேண்டியதிருக்கும்.
நாடெங்கும் உள்ள ஊடகங்களின் விமர்சனத்திற்கும் ஆளாக வேண்டியதிருக்கும்.
ஏற்கனவே காங்கிரஸ் பிரமுகரான கல்மாடி கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் – கனிமொழிக்காக விதிகளைத் தளர்த்துவது சி.பி.ஐ.யின்  நம்பகத்தன்மை குறித்த சந்தேகத்தை ஏற்படுத்தும். பெண் என்பதற்காக விதிவிலக்குக் கோருவதை விரும்பவில்லை என்று இரு தினங்களுக்கு முன்பு கனிமொழியே கருத்துத் தெரிவித்திருக்கும்போது அவரை மட்டும் கைது செய்வதிலிருந்து விலக்களிப்பது அரசியல் சர்ச்சைக்கும் வழிவகுக்கும்.
வெறுமனே காங்கிரசுக்கும், தி.மு.க.வுக்குமான உறவு இதனால் முறிய வாய்ப்பிருப்பதாக இரு கட்சிகளும் நினைக்கலாம். உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலில் சி.பி.ஐ செயல்பட்டுவரும் போது – கூடுதலான கவனத்துடன் செயல்பட்டாக வேண்டிய நிலையில் இருக்கிறது. தன்னுடைய கட்சியைச் சேர்ந்தவரான கல்மாடிக்கு வழங்காத சலுகையை கனிமொழிக்கு அளிப்பதை காங்கிரஸ் எப்படி விரும்பும்?
அதே சமயம் மற்றவர்களுக்குத் திட்டவட்டமாக முன்ஜாமீன் தருவதை மறுத்து வந்த சி.பி.ஐ. திரும்பவும் மே 14 ஆம் தேதிக்கு – முன்ஜாமீன் வழங்குவது சம்பந்தமாக முடிவெடுப்பதை ஒத்தி வைத்திருக்கிறது. சரியாக தேர்தல் முடிவு வெளிவந்தபிறகு மறுநாளில் இது குறித்த முடிவு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருப்பதும் தற்செயல் தானா? தேர்தல் முடிவு தி.மு.க.வுக்குச் சாதகமாக அமைந்தால் ஒரு முடிவும், எதிராக அமைந்தால் ஒரு முடிவும் எடுக்கப்படுமா? என்பதெல்லாம் அரசியல் சார்ந்த பார்வையுடன் கேட்கப்பட்டாலும் – அதற்கான வாய்ப்பை இந்த ஒத்திவைப்பு நிகழ்வு ஏற்படுத்தியிருக்கிறது.
ஏற்கனவே தி.மு.க.வும் கனிமொழியின் பெயர் குற்றப் பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டு சம்மன் அனுப்பப்பட்டதும் -  கூடிய கட்சியின் உயர்மட்டக்குழு எந்தக் காரசாரமான விமர்சனங்களுமின்றி ”சதியை எதிர்கொள்வோம்” என்று பட்டும்படாமலுமாக தீர்மானத்தை  நிறைவேற்றுவதுடன் முடித்துக்கொண்டது.
மே – 13  அன்று வாக்கு எண்ணிக்கை நடக்கும்வரை தி.மு.க. காங்கிரசுக்கு எதிரான எந்தவிதமான விமர்சனத்தையும் முன்வைக்கத் தயங்கும் மனநிலையிலேயே இருக்கும். அதற்குள் காங்கிரசை விரோதித்துக் கொள்வதை தி.மு.க விரும்பாது.
தமிழகத் தேர்தலில் ஒருவேளை தி.மு.க.வுக்கு எத்தனை தொகுதிகள் கிடைத்தாலும் காங்கிரசின் தயவில்லாமல் தி.மு.க ஆட்சியமைக்க முடியாது என்கிற யதார்த்தம் அதற்குப் புரியாதா? அ.தி.மு.க. வெற்றி பெற்றால் ஒருவேளை தி.மு.க கொஞ்சமாவது வாய்திறந்து தி.மு.க.வின் அந்தக்கால கொள்கையைக் கசியவிடலாம்.
இந்த நிலையில் – வாயடைக்கப்பட்ட நிலையில் கனிமொழி பிரச்சினையை தர்மசங்கத்துடன் வேடிக்கை பார்ப்பதைத் தவிர தி.மு.க.வுக்கு வேறு வழியில்லை.


                                     -அர்சத் அஹம்த்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக