பரபரப்பூட்டக்கூடிய நாளிதழ் செய்திகளைச் சுருக்கித் தொகுத்து ஒரே நாளில் நச்சென்று பார்த்தால் எப்படியிருக்கும் ? அப்படியிருக்கிறது ''கோ'' போட்டோ ஜெர்னலிஸ்ட்டான அஸ்வின் பாத்திரத்தில் ஜீவா. முடிந்தவரை மெனக்கிட்டிருக்கிறார். சாகசம் காட்டி,அதிரடிச்சண்டைகள் போட்டு, காதல் செய்து இந்தப்படம் ஜீவாவின் மார்க்கெட் மதிப்பை நிச்சயம் உயர்த்தும் இயக்குநர் கே.வி.ஆனந்தின் மதிப்பையும் கூட்டும்.அதற்கேற்ற துடிப்பு இருக்கிறது படத்தில்.
டைட்டில் போடும்போது பல முக்கியமான புகைப்படங்களை வரிசைப்படுத்தியிருக்கிறார்கள். அவற்றில் ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவை எடுத்த
கடைசிநேர புகைப்படமும், அந்தப்புகைப்படத்தை எடுக்க உண்மையிலேயே உயிரைக்கொடுத்த ஹரிபாபுவின் படமும் இடம்பெற்றிருக்க வேண்டாமா? முகமூடி அணிந்த சிலர் வங்கி ஒன்றைக்கொள்ளையடிக்கிறார்கள். அதைவிரட்டி புகைப்படம் எடுத்து கொள்ளையடித்தவர்களில் சிலர் பிடிபடக்காரணமாக இருக்கிறார் ஜீவா.இந்தகாட்சியுடன் துவங்குகிற படத்தில் தொடர்ந்து விறுவிறுப்பு. ஆளும்கட்சி, எதிர்க்கட்சி பாகுபாடில்லாமல் வாசகர்களுக்கு உண்மையாக இருக்க முயலும் நாளிதழ் அலுவலகம், அங்கு நேரடியாக வந்து மிரட்டும் எதிர்க்கட்சித் தலைவர். இந்த அரசியல் போட்டிக்கிடையில் நியாயமான மக்கள் குரலாக இளைஞர்கள் தலைமையில் முன்னேறத்துடித்துக்கொண்டிருக்கும் இளம் தலைவராக அஜ்மல் , தேர்தலில் விளையாடும் பணம், வன்முறைக்கு மத்தியில் வெடிகுண்டு வெடித்துப் பல உயிர்கள் பறிபோய் அந்த அனுதாப இடைவெளியில் தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியைப்பிடிக்கிற அஜ்மல் உண்மையில் யார் என்பதை இறுதிக்காட்சியில் சஸ்பென்சாகச் சொல்கிறார்கள். துவங்குவதிலிருந்தே பரபரப்பாக ஓடிக்கொண்டே இருக்கிற ஜீவாவின் பல நடவடிக்கைகள் தமிழகத்திலோ, பக்கத்து மாநிலத்திலோ நடந்த சம்பவங்களுடன் ஒத்துப்போகின்றன. ஆனால் தமிழகத்தில் நடப்பதாகச் சொல்லப்படும் கதையில் வெடிகுண்டு, கொள்ளை என்று பல உயிர்களைக்கொல்லும் நக்சலைட்டுகள் எங்கிருந்து வந்தார்கள்? அவர்களைப் பின்னணியாக வைத்து ஒருவர் முதல்வராவதாகச் சொல்வதும் -மற்ற கைதிகளை விடுவிக்க அவரை மிரட்டுவதாகச் சொல்வதும் தமிழகச்சூழலோடு பொருந்தவில்லையே. உண்மையின் சாயல்படிந்த சம்பவங்களுக்கு இடையே ஏன் இந்த மிகையான செருகல் ?
ராணுவ வீரன் படத்தில் ரஜினி நக்சலைட்டுகளை வீழ்த்துகிற மாதிரி இதிலும்
வீழ்த்தப்படுவது நடக்கிறது என்றால் இந்த விஷயத்தில் – இஸ்லாமியர்களை வில்லன்களாகக் காட்டிச்சில தமிழ் சினிமாவில் கல்லா கட்டுவது மாதிரி - இதிலும் நக்சலைட்டுகள் சித்தரிக்கப்பட்டிருக்கிற இடத்தில் இடிக்கிறது.
அதைப்போல கொச்சையான பல வசனங்கள் படத்தில். ஜீவாவுடன் வேலை பார்க்கும் பெண் பத்திரிகையாளர் தனக்கு ஓரிரவுக்கு என்ன விலை பேசுவார்கள் என்று கேட்பதில் துவங்கி - '' இந்தா பார்த்துக்கடா '' என்று சிறு விடலைப்பையனுக்குத் தன்னுடம்பைத் திறந்து அதே பெண் காண்பிக்கிற காட்சி எல்லாம் ஓவர். திரைக்கதை - வசனத்தில் பங்கேற்றிருக்கிற எழுத்தாளர்களான சுபா இரண்டுபேரும் இதில் சில துண்டுக்காட்சிகளில் ஏன் வம்படியாகத் தலைகாட்டி சிறுவசனம் பேசி விழித்துவிட்டுஇப்படி நகரவேண்டும்? நடிப்பில் எல்.கே.ஜி அட்மிஷனா? இதையெல்லாம் மீறி இதமான பாட்டுக்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட அழகான லோகேஷன்கள் ( அது சரி - ஏதோ நம்மூர் தற்கொலைப்பாறை மாதிரி இருக்கிற உச்சிப்பாறை முனையில் போய்த்தான் இளம்ஜோடிகள் கொஞ்சி விளையாடுவார்களா? பரபரவென்று நழுவிப்போகிற திரைக்கதை – எடிட்டிங் எல்லாம் படத்தை' நவீன மசாலாவாக' கமர்ஷியலாக வெற்றிபெற வைத்துவிடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக