வெள்ளி, 6 மே, 2011

வானம்


natpuதமிழ் சினிமாவுக்கே உரித்தான ஒரே மாதிரி கதை சொல்லும் பாணியிலிருந்து விலகி - இதில் ஐந்து கிளைக் கதைகள். (கொஞ்சம் ஆச்சர்யப்பட வேண்டியதிருக்கிறது). கடைசியில் மருத்துவமனைச் சூழலில் ஐந்து ட்ராக்குகளும் ஒன்று சேர்ந்து விலகுகின்றன.
natpuமலையாளத்தில் இதைவிட அதிகமான ட்ராக்குகளுடன் சமீபத்தில் ஒரு படம் வெளியாகி அதற்கு வணிகரீதியான வெற்றியும் கிடைத்திருக்கிறது. கேபிள் இணைப்புக் கொடுக்கிற சேரி இளைஞனாக சிம்பு. அவர் காதலிக்கும் பெண்ணிடம் தன்னை வசதியானவனாகக் காட்டிக்  கொள்கிறார். புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்காக ஒரு ஹோட்டலில் நடக்கும் விருந்துக்கு நாற்பதாயிரம் ரூபாயில் டிக்கெட்டுக்கள் வாங்கித்தர ஒப்புக் கொள்கிறார். அதற்காக தெருவில் போகும் பெண்களின் சங்கிலியை அறுக்கப் போய்ப் போலீசில் பிடிபடுகிறார்.
கடைசியில் தன்னுடைய மகனை உப்பளத்தில் கொத்தடிமையாக இருக்கும் கொடுமையிலிருந்து மீட்கத் தன்னுடைய கிட்னியை விற்க மாமனாருடன் சென்னைக்கு வரும் சரண்யாவின் பணத்தைத் திருடி இறுதி நேரத்தில் ‘மனம் திருந்தி’  ஒப்படைத்துவிட்டு கண்கலங்குகிறார் சிம்பு.
natpuதன்னுடைய நலத்தை மட்டும் முன்னிறுத்தும் நடனக்குழு நடத்தும் இளைஞனாக பரத்,  இந்துத்துவா ஆட்களால் ஊர்வலத்திற்கிடையே மறிக்கப்பட்டு தாக்கப்பட்டு, கர்ப்பமான மனைவியின் கருகலைக்கப்பட்டதை அறிந்து ஓவென்று கதறி அழும் இஸ்லாமியராக பிரகாஷ்ராஜ், தரகர்களிடமும், காவல் துறையினரிடமும்  படாதபாடுபடும் பாலியல் தொழிலாளியாக அனுஷ்கா என்று பல கிளைப் பாத்திரங்கள்.
சில வித்தியாசமான காட்சிகள். கிட்னியை நகரத்தில் விற்க வரும் சரண்யாவும் முதுமையேறிய அவருடைய மாமனாரும் கிட்னித் தரகர்கள் ஒட்ட வைக்கும் பொய்யைச் சரிவரச் சொல்ல முடியாமல் திணறுகிற காட்சி.. தன்னுடைய தோழியைக் காப்பாற்றுவதற்காக மருத்துவமனையில் டாக்டரிடம் திரும்பத் திரும்பக் கெஞ்சும் பாலியல் தொழிலாளியான அனுஷ்கா. ''உங்களுடன் படுத்துக்கிறேன்.. எப்படியாவது இவளைக் காப்பாத்துங்க'' என்று மன்றாடுகிற இன்னொரு காட்சி.
natpuதன்னுடைய ''இமேஜை'' எல்லாம் தூக்கிக் கடாசிவிட்டு நடித்திருக்கிற சிம்பு, அனுஷ்கா, பிரகாஷ்ராஜ், சரண்யா என்று பலருடைய நடிப்பு படத்திற்கு உயிரூட்டினாலும் பல நெருடல்கள்.
ஆரம்பத்தில் இஸ்லாமியர்கள் அந்நியத் தன்மையுடன் நடத்தப்படும் விதத்தைப் பற்றி எல்லாம் சொல்லிவிட்டுக் கடைசியில் மக்கள் அடர்ந்திருக்கிற பொது மருத்துவமனையில் துப்பாக்கிகளுடன் சகலரையும் தாக்குபவர்களாக இஸ்லாமியத் தீவிரவாதிகளைக் காட்டியிருப்பதும் பொருத்தமாக இல்லை. அதிலும் தான் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிற மருத்துவமனையிலேயே தீவிரவாதியான ஜெயப்பிரகாஷ் உடம்பில் வெடிமருந்தைக் கட்டிக் கொண்டு தாக்குதலில் ஈடுபடுகிறாராம்.
natpuஅதுவரை திருடுவதற்காக மற்றவர்களை மோப்பம் பிடித்து விரட்டித் திரியும் சிம்பு மருத்துவமனையைக் காப்பாற்ற வெடிகுண்டுத் தீவிரவாதியைக் கட்டிப் பிடித்தபடி கீழே விழுந்து உயிரைத் துறந்து ''தியாகி'' ஆகி விடுகிறார். அப்போது ஒருவர் ''சாவையே சாகடிச்சுட்டாண்டா'' என்று செமையான டயலாக் வேறு பேசும்போது உடம்பெல்லாம் மிளகாய்ப்பொடி தடவிய மாதிரி ஜிவ்வென்று காந்துகிறது.
natpu''கோ'' படத்தில் '' நக்சல்கள்''.  இந்தப் படத்தில் '' இஸ்லாமியத் தீவிரவாதிகள்''. ஏனிந்த மாதிரியான மிகையான - யதார்த்தத்திற்குப் பொருந்தாத ''தீவிரங்கள்''? (முன்பெல்லாம் தேசியத்தைக் கடித்துக் குதறும் குத்தகை தாரர்களான விஜயகாந்த், அர்ஜூன் நடிக்கும் படங்களில்தான் இப்படிப்பட்ட ''தீவிரவாத அபத்தங்களைப் பார்க்க முடியும். இப்போது அதற்குச் சற்றும் குறைச்சலில்லாமல் அதே அஃமார்க் தீவிரவாத ''மசாலா'' தொடர்ந்து கொண்டிருக்கிறது)
தமிழ் சினிமாவும், தீவிரவாதக் குளறுபடிகளும் - என்று கோடம்பாக்கத்துக் கதைக் களத்தைப் பற்றித் தனியாகத் ''தீவிரமான'' ஆராய்ச்சியே பண்ண வேண்டும்  போலிருக்கிறது.


Comments

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக