சனி, 7 மே, 2011

ஓராண்டுப் பயணம் - நூறாண்டு நெருக்கம்



பயணங்கள் பல வகையானாலும், ஒவ்வொன்றிற்கும் ஒவ்வோர் இலக்கு என்பதும் செல்லும் பாதை என்பதும் நிச்சயம் இருக்கும். இலக்குகள் அற்ற போக்கும், பாதைகள் வரையறுக்காத பயணமும் வெற்றிபெறாது என்பதற்கு வரலாற்றில் பல உதாரணங்கள் உள்ளன. இலக்குகளும் பாதைகளும் சரியாக அமைந்து பயணித்தால் வரலாற்றையே மாற்றும் பயணங்களாக அவை அமையும் என்பதனை வாஸ்கோடகாமா, கொலம்பஸ் போன்றவர்களின் பயணங்கள் மெய்ப்பித்து உள்ளன. ஓராண்டிற்கு முன் "புதிய தலைமுறை" வார இதழ் மூலமாக நாம் மேற்கொண்ட அப்படியொரு பயணம் தமது இலக்கான இளைய தலைமுறையைச் சரியாக அடைந்ததுடன், அவர்களையும் பயணத்தில் சேர்த்துக்கொண்டு சமூகத்தை மாற்றும் சமத்துவப் பயணமாகத் தொடர்கிறது. இன்று இரண்டாம் ஆண்டிற்குள் அடியெடுத்து வைத்து இளைய தலைமுறை இடையே ஒரு புதிய வரலாற்றைப் படைத்துள்ளது. இப்போது இது இளைய தலைமுறையை நோக்கிய பயணம் அல்ல, இளைய தலைமுறையுடன் இணைந்து உலகை மாற்றியமைக்க அவர்கள் தலைமையில் தொடரும் தன்னலமற்ற பயணமாகும். இப்பயணத்தைத் தொடங்கியவர்கள் என்ற பெயர் வேண்டுமானால் நம் இதழுக்குச் சேரலாமேயொழிய பயணத்தில் பங்கு கொண்டு, பாலங்கள் அமைத்து உறவுகொண்டு வெற்றியடையச் செய்த பெருமை நம் வாசகர்களையே சாரும். இந்தப் புதிய முயற்சிக்கு வாசகர்களாகிய நீங்கள் வரவேற்பும், ஆதரவும் அளித்து ஊக்கமூட்டி, உந்து சக்தியாய் விளங்கியதால்தான் இப்பயணத்தின் வெற்றி சாத்தியமாயிற்று. இதற்காக நன்றி கூறவேண்டும்என்று நா எழுந்தாலும், "நன்றி" கூறி உங்களை அந்நியப்படுத்தவும் "புதிய தலைமுறை" குடும்பத்திலிருந்து பிரித்துப் பார்க்கவும் கூடாது என்று நெஞ்சம் நினைவூட்டுகிறது.

கடந்து வந்த ஓராண்டுப் பயணத்தில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் 30 வாசகர்களைத் தேர்ந்தெடுத்து, புதிய தலைமுறையில் இதழாளர்களாக பரிணமிக்க வைத்திருக்கும் "புதிய தலைமுறை பத்திரிகையாளர் திட்டம்"; இளைஞர்கள் பொருளாதார நிலையிலும் முன்னேற்றம் காணவேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் தொடங்கப்பட்டு, தற்போதைய நிலையில் சுமார் 2,000 இளைஞர்கள் பயனடைய உள்ள "இளைஞர் சுயதொழில் மற்றும் வேலைவாய்ப்பு - விதைகள் திட்டம்"; சமூக நலனுக்காக உழைக்கும், சிந்திக்கும் வாசகர்களை அடையாளம் காட்டி அவர்களை ஓரணியாகத் திரளச்செய்த, "வாசகர் வட்டம்"; பொருளாதாரம் கல்விக்குத் தடையாக அமைந்துவிடக் கூடாது என்ற நோக்குடன் "புதிய தலைமுறை" பொறுப்பேற்று, பொறியியல், மருந்தியியல், கல்வியியல் போன்ற உயர்கல்வி பயிலும் வாய்ப்பினை 62 மாணவர்களுக்குப் பெற்றுத்தந்த "இலவச உயர்கல்வித் திட்டம்" போன்ற நம் பணிகள், "போதிப்பதை நாம் சாதிப்பவர்கள்" என்பதனை எடுத்துக் காட்டின. வாசகர்களின் கருத்துகளும் பின்னூட்டல்களும் நாம் சரியான வழியில்தான் செல்கிறோம் என்பதை உறுதிப்படுத்தும் வழிகாட்டிகளாகவும் திகழ்ந்தன. மேலும், இளைஞர்களுக்காகவே எப்பொழுதும் கனவு கண்டுகொண்டிருக்கும் இன்றைய நூற்றாண்டின் மாமனிதரான அப்துல் கலாம் போன்றவர்களையும் நம் இதழின் வழி வாசகர்களோடு உறவாட வைத்தது மகிழ்ச்சியைத் தருகிறது.

தீய எண்ணங்கள் கொண்டவர்கள் ஒன்று சேர்வதுஇயற்கை, எளிது. ஆனால், நல்லெண்ணம் படைத்தவர்கள் ஒன்று கூடுவது கடினம் என்ற கருத்து இப்பொழுதும் நிலவுகிறது. ஏனெனில், தீமை செய்வோர்களின் குறிக்கோள் அழிவு. அதை யார் செய்தாலும் சரி, அதனால் வரும் நன்மையோ தீமையோயாருக்குச் சென்றாலும் கவலையில்லை என்பதினால்தான். ஆனால், நல்லது செய்ய விரும்புவோர் சிலர் நற்பெயர் தமக்கே சேரவேண்டும் என்று நினைப்பதால் பொதுநலம் மீறி தன்னலம் செயல்படத் துவங்கி, அனைவரையும் இணைந்து செயல்படவிடாமல் தடுக்கின்றது. மக்கள் நலம்தான் முக்கியம், அதனால் வரும் நற்பெயர் யாருக்குச் சென்றாலும் கவலையில்லை என்று தனித்தனியாகச் செயல்படும் பொதுத்தொண்டுக் குழுக்கள் இணைந்துவிட்டால், அச்சக்திக்கு மண்ணில் இணையே கிடையாது. நாம் மேற்கொண்டுள்ள இப்பயணம் அப்படி ஒரு சக்தி உருவாக வேண்டும் என்பதற்கே பாடுபடும்.

காலங்களால் கழிந்தது ஓராண்டுதான் என்றாலும், நம் ஒருமித்த சிந்தனையால், பகிர்ந்து கொள்ளப்பட்ட கருத்துகளால், செல்லும் பாதையின் ஒற்றுமையால் நமக்குள்ளே ஒரு நூறாண்டு நெருக்கம் உருவாகி வளர்ந்துள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது. இது ஒரு தொடக்கம்தான்; பயணத்தின் ஆரம்பம்தான் இனியும் செல்ல வேண்டிய தூரம் அதிகம்; செலவிட வேண்டிய காலம் நெடிது; பகிர்ந்துகொள்ள வேண்டியவை பல. இந்தத் திண்மையுடன் நம் பயணம் தொடர்ந்தால் இளைய தலைமுறை மாற்றத்தின் மறு உருவாய் மாறுவதும், சமுதாயத்தை மாற்றுவதும் நிகழப்போகும் வரலாறு என்பதில் ஐயமில்லை. வரலாறு என்பது நடந்துமுடிந்த நிகழ்வுகளின் தொகுப்பு என்று நாம் நினைத்திருந்தாலும், அது வெற்றிகளையும், வெற்றி பெற்றவர்களையும் வர்ணிக்கப் பயன்படுமாறு வெற்றியாளர்களின் கோணத்திலிருந்து எழுதப்பட்டது என்பதுதான் உண்மையாகும். ஆதலால், நம்முடைய இன்றைய முயற்சிகள், போற்றும் நிகழ்வுகள் சரித்திரம் ஆக வேண்டுமானால் இளைய தலைமுறை ஒருங்கிணைந்து வெற்றி பெற்றாலேயே அது சாத்தியமாகும். வெற்றியாளர்களின் இன்றைய உலகில், நமது இளைய தலைமுறை தங்களின் தனிப்பட்ட வெற்றியை அடைந்து நாட்டில் மாற்றத்திற்கும் சமுதாயத்தின் ஏற்றத்திற்கும் தேவையான வெற்றியையும் வென்றிடட்டும். அதற்கு நம் "புதிய தலைமுறை" நண்பனாய், நல்லாசிரியனாய், நன்மை உரைக்கும் வழிகாட்டியாய் இளைய தலைமுறைக்குத் துணை நின்று பயணத்தைத் தொடரும்.

புதிய தலைமுறையின் பயணம் தொடரட்டும்! -பாரெங்கும் இளைய தலைமுறையின் புகழ் பரவட்டும்! 

ஒசாமா பின்லேடன் மறைவிற்காக சென்னையில் விசேஷ தொழுகை



உலகின் மிகப் பயங்கர தீவிரவாதியான ஒசாமா பின்லேடனை அமெரிக்கா சுட்டுக் கொன்றுள்ளது. ஒசாமா பின்லேடன் இறந்ததற்காக சென்னை அண்ணாசாலையில் உள்ள மக்கா மஸ்ஜித் இஸ்லாமிய மையத்தில் விசேஷ தொழுகை நடத்தப்பட்டது. அதில் அதிக அளவில் முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். பள்ளிவாசலைச் சுற்றியுள்ள சுவர்களில் ஒசாமா பின்லேடனுக்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

பாகிஸ்தானில் ஒசாமா தங்கியிருந்த வீடு தரைமட்டமாகிறது





அமெரிக்க ராணுவத்தால் சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் தங்கியிருந்ததாகக் கூறப்படும் பண்ணை வீட்டை விரைவில் இடித்துத் தள்ளப்படும் என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. இப்பகுதி முழுவதும் தற்பொழுது ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் முக்கிய நகரங்களுக்குக் குறி: அல்-கொய்தா இயக்கத்தினர் சதி



வருகின்ற செப்டம்பர் 11-ந் தேதி ‘இரட்டை கோபுரம்’ தாக்கப்பட்ட தினமான அன்று அமெரிக்காவில் முக்கியமான ரயில்நிலையங்களில் தாக்குதல் நடத்தி ரயில் போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்யும் நாசவேலைகளில் ஈடுபடப் போவதாக ஒசாமா பின்லேடன் தங்கியிருந்த வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட ஆவணங்களிலிருந்து தெரிய வருகிறது. எனவே அமெரிக்காவிலுள்ள முக்கிய நகரங்களுக்கும், மற்றும் ரயில்வே நிலையங்கள் மற்றும் ரயில்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஒசாமா கொல்லப்பட்டதன் எதிரொளி: அமெரிக்கப் படைகளைக் குறைக்க பாகிஸ்தான் முடிவு

பாகிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கையைக் குறைக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. பாகிஸ்தானுக்குத் தெரியாமல் அந்நாட்டில் நுழைந்து ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதால், இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

சோதனை கனிமொழிக்கா? தி.மு.க வுக்கா? ஒத்திவைக்கப்பட்ட கனிமொழி கைது?




”நீதிமன்றத்தை நான் மதிக்கிறேன். நீதிமன்றம் எடுக்கும் எந்த முடிவையும் நான் மதித்து நடப்பேன்…”
”நான் பெண் என்பதற்காக எந்தச் சலுகையும் காட்டக்கூடாது எனக் கருதுகிறேன் ..”
” நான் இதுவரை முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யவில்லை”
இதெல்லாம் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதற்கு டெல்லிக்கு வந்திருந்த எம்.பி.யான கனிமொழி செய்தியாளர்களிடம்   பேசியவை.
ஆனால் மறுநாளே சூழ்நிலை மாறிவிட்டது. சிறப்பு நீதிமன்றத்தில் அவர் ஆஜரான அன்றே கூடுதல் குற்றப் பத்திரிகையில் சேர்க்கப்பட்டிருந்த கனிமொழியை சி.பி.ஐ கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் தாக்கல் செய்யப்பட்டது. கனிமொழி சார்பில் மூத்த வழக்கறிஞரும், பா.ஜ.க.வைச் சேர்ந்தவருமான ராம்ஜேட்மலானி ஆஜராகி வாதாடியிருப்பது கட்சியைத் தாண்டி இந்த வழக்கு போயிருப்பதைக் காட்டியிருக்கிறது. (தொழில் தர்மம் என்று சொல்லப்பட்டாலும் – கனிமொழிக்காக வாதாட வேறு வழக்கறிஞரே இல்லையா? அல்லது மாற்றான் தோட்டத்து மல்லிகையா?)
முன்பெல்லாம் ஆ.ராசாவுக்கும் அலைக்கற்றை ஊழலுக்கும் சம்பந்தமில்லை என்றும் தலித் என்பதால் அவர் மீது  வீண்பழி சுமத்தப்படுகிறது என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்த தி.மு.க.வின் வாதத்தை மீறுகிற வகையில் கனிமொழிக்காக ஆஜரான வழக்கறிஞரே ”அலைக்கற்றை முறைகேட்டிற்கு அப்போதைய தொலைத் தொடர்புத்துறை அமைச்சரான ஆ.ராசாவே காரணம். அதில் கனிமொழிக்கு எந்தத் தொடர்பும் கிடையாது” என்று வாதாடியது அரசியல் விசித்திரம். தன்னுடைய மகளுக்கு ஒரு நெருக்கடி வந்ததும் ஆ.ராசாவைக் கைகழுவ தி.மு.க தயாராகி விட்டதையே இது உணர்த்துகிறது. (தகத்தாய.. உதாரணம் எல்லாம் என்னாச்சு? )

முன்பு ஆ.ராசா மீது எதிர்க்கட்சிகள் வீண்பழி சுமத்துவதாகக் குற்றம்சாட்டிய தி.மு.க அதே குற்றச்சாட்டை நீதிமன்றத்திற்கு முன்னால் சுமத்தியிருப்பதற்கு என்ன அர்த்தம்?
லஞ்சம் கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஆசிப் பால்வா கைது செய்யப்பட்டிருக்கும் போது,  லஞ்சத்தை வாங்கியதாகக் குற்றம் சாட்டப்படும் கனிமொழியை சி.பி.ஐ  விட்டுவிடக் கூடாது என்று பல்வா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடியதிலிருந்து பல விஷயங்கள் வெளிவர ஆரம்பித்திருக்கின்றன.
சனிக்கிழமை அன்று நீதிமன்றத்தில் வாதாடிய சி.பி.ஐ கனிமொழிக்கும் கலைஞர் டிவிக்குமான பல தொடர்புகளை உறுதிப்படுத்தியிருக்கிறது. எந்த ஆவணங்களும் இல்லாமல் கலைஞர் டிவிக்கு பணம் கைமாறியிருப்பதாகக் கூறியிருப்பதுடன் கனிமொழிக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என்று வாதாடியிருக்கிறது.
கலைஞர் டிவிக்கு வழங்கப்பட்ட பணம் தொடர்பாகப் போலியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறது சி.பி.ஐ. இது வரை குற்றப்  பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்ட பால்வா உள்ளிட்ட பலருக்கு முன்ஜாமீன் மறுக்கப்பட்டிருக்கிற நிலையில் கனிமொழிக்கு மட்டும் முன்ஜாமீன் வழங்கினால் உச்சநீதிமன்றத்தின் கேள்விக்கு சி.பி.ஐ ஆளாக வேண்டியதிருக்கும்.
நாடெங்கும் உள்ள ஊடகங்களின் விமர்சனத்திற்கும் ஆளாக வேண்டியதிருக்கும்.
ஏற்கனவே காங்கிரஸ் பிரமுகரான கல்மாடி கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் – கனிமொழிக்காக விதிகளைத் தளர்த்துவது சி.பி.ஐ.யின்  நம்பகத்தன்மை குறித்த சந்தேகத்தை ஏற்படுத்தும். பெண் என்பதற்காக விதிவிலக்குக் கோருவதை விரும்பவில்லை என்று இரு தினங்களுக்கு முன்பு கனிமொழியே கருத்துத் தெரிவித்திருக்கும்போது அவரை மட்டும் கைது செய்வதிலிருந்து விலக்களிப்பது அரசியல் சர்ச்சைக்கும் வழிவகுக்கும்.
வெறுமனே காங்கிரசுக்கும், தி.மு.க.வுக்குமான உறவு இதனால் முறிய வாய்ப்பிருப்பதாக இரு கட்சிகளும் நினைக்கலாம். உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலில் சி.பி.ஐ செயல்பட்டுவரும் போது – கூடுதலான கவனத்துடன் செயல்பட்டாக வேண்டிய நிலையில் இருக்கிறது. தன்னுடைய கட்சியைச் சேர்ந்தவரான கல்மாடிக்கு வழங்காத சலுகையை கனிமொழிக்கு அளிப்பதை காங்கிரஸ் எப்படி விரும்பும்?
அதே சமயம் மற்றவர்களுக்குத் திட்டவட்டமாக முன்ஜாமீன் தருவதை மறுத்து வந்த சி.பி.ஐ. திரும்பவும் மே 14 ஆம் தேதிக்கு – முன்ஜாமீன் வழங்குவது சம்பந்தமாக முடிவெடுப்பதை ஒத்தி வைத்திருக்கிறது. சரியாக தேர்தல் முடிவு வெளிவந்தபிறகு மறுநாளில் இது குறித்த முடிவு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருப்பதும் தற்செயல் தானா? தேர்தல் முடிவு தி.மு.க.வுக்குச் சாதகமாக அமைந்தால் ஒரு முடிவும், எதிராக அமைந்தால் ஒரு முடிவும் எடுக்கப்படுமா? என்பதெல்லாம் அரசியல் சார்ந்த பார்வையுடன் கேட்கப்பட்டாலும் – அதற்கான வாய்ப்பை இந்த ஒத்திவைப்பு நிகழ்வு ஏற்படுத்தியிருக்கிறது.
ஏற்கனவே தி.மு.க.வும் கனிமொழியின் பெயர் குற்றப் பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டு சம்மன் அனுப்பப்பட்டதும் -  கூடிய கட்சியின் உயர்மட்டக்குழு எந்தக் காரசாரமான விமர்சனங்களுமின்றி ”சதியை எதிர்கொள்வோம்” என்று பட்டும்படாமலுமாக தீர்மானத்தை  நிறைவேற்றுவதுடன் முடித்துக்கொண்டது.
மே – 13  அன்று வாக்கு எண்ணிக்கை நடக்கும்வரை தி.மு.க. காங்கிரசுக்கு எதிரான எந்தவிதமான விமர்சனத்தையும் முன்வைக்கத் தயங்கும் மனநிலையிலேயே இருக்கும். அதற்குள் காங்கிரசை விரோதித்துக் கொள்வதை தி.மு.க விரும்பாது.
தமிழகத் தேர்தலில் ஒருவேளை தி.மு.க.வுக்கு எத்தனை தொகுதிகள் கிடைத்தாலும் காங்கிரசின் தயவில்லாமல் தி.மு.க ஆட்சியமைக்க முடியாது என்கிற யதார்த்தம் அதற்குப் புரியாதா? அ.தி.மு.க. வெற்றி பெற்றால் ஒருவேளை தி.மு.க கொஞ்சமாவது வாய்திறந்து தி.மு.க.வின் அந்தக்கால கொள்கையைக் கசியவிடலாம்.
இந்த நிலையில் – வாயடைக்கப்பட்ட நிலையில் கனிமொழி பிரச்சினையை தர்மசங்கத்துடன் வேடிக்கை பார்ப்பதைத் தவிர தி.மு.க.வுக்கு வேறு வழியில்லை.


                                     -அர்சத் அஹம்த்

வெள்ளி, 6 மே, 2011

கோ

                     
natpu
பரபரப்பூட்டக்கூடிய நாளிதழ் செய்திகளைச் சுருக்கித் தொகுத்து ஒரே நாளில் நச்சென்று பார்த்தால் எப்படியிருக்கும் ? அப்படியிருக்கிறது ''கோ'' போட்டோ ஜெர்னலிஸ்ட்டான அஸ்வின் பாத்திரத்தில் ஜீவா. முடிந்தவரை மெனக்கிட்டிருக்கிறார். சாகசம் காட்டி,அதிரடிச்சண்டைகள் போட்டு, காதல் செய்து இந்தப்படம் ஜீவாவின் மார்க்கெட் மதிப்பை நிச்சயம் உயர்த்தும் இயக்குநர் கே.வி.ஆனந்தின் மதிப்பையும் கூட்டும்.அதற்கேற்ற துடிப்பு இருக்கிறது படத்தில்.
டைட்டில் போடும்போது பல முக்கியமான புகைப்படங்களை வரிசைப்படுத்தியிருக்கிறார்கள். அவற்றில் ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவை எடுத்த
natpu
கடைசிநேர புகைப்படமும், அந்தப்புகைப்படத்தை எடுக்க உண்மையிலேயே உயிரைக்கொடுத்த ஹரிபாபுவின் படமும் இடம்பெற்றிருக்க வேண்டாமா? முகமூடி அணிந்த சிலர் வங்கி ஒன்றைக்கொள்ளையடிக்கிறார்கள். அதைவிரட்டி புகைப்படம் எடுத்து கொள்ளையடித்தவர்களில் சிலர் பிடிபடக்காரணமாக இருக்கிறார் ஜீவா.இந்தகாட்சியுடன் துவங்குகிற படத்தில் தொடர்ந்து விறுவிறுப்பு. ஆளும்கட்சி, எதிர்க்கட்சி பாகுபாடில்லாமல் வாசகர்களுக்கு உண்மையாக இருக்க முயலும் நாளிதழ் அலுவலகம், அங்கு நேரடியாக வந்து மிரட்டும் எதிர்க்கட்சித் தலைவர். இந்த அரசியல் போட்டிக்கிடையில் நியாயமான மக்கள் குரலாக இளைஞர்கள் தலைமையில் முன்னேறத்துடித்துக்கொண்டிருக்கும் இளம் தலைவராக அஜ்மல் , தேர்தலில் விளையாடும் பணம், வன்முறைக்கு மத்தியில் வெடிகுண்டு வெடித்துப் பல உயிர்கள் பறிபோய் அந்த அனுதாப இடைவெளியில் தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியைப்பிடிக்கிற அஜ்மல் உண்மையில் யார் என்பதை இறுதிக்காட்சியில் சஸ்பென்சாகச் சொல்கிறார்கள். துவங்குவதிலிருந்தே பரபரப்பாக ஓடிக்கொண்டே இருக்கிற ஜீவாவின் பல நடவடிக்கைகள் தமிழகத்திலோ, பக்கத்து மாநிலத்திலோ நடந்த சம்பவங்களுடன் ஒத்துப்போகின்றன. ஆனால் தமிழகத்தில் நடப்பதாகச் சொல்லப்படும் கதையில் வெடிகுண்டு, கொள்ளை என்று பல உயிர்களைக்கொல்லும் நக்சலைட்டுகள் எங்கிருந்து வந்தார்கள்? அவர்களைப் பின்னணியாக வைத்து ஒருவர் முதல்வராவதாகச் சொல்வதும் -மற்ற கைதிகளை விடுவிக்க அவரை மிரட்டுவதாகச் சொல்வதும் தமிழகச்சூழலோடு பொருந்தவில்லையே. உண்மையின் சாயல்படிந்த சம்பவங்களுக்கு இடையே ஏன் இந்த மிகையான செருகல் ?
ராணுவ வீரன் படத்தில் ரஜினி நக்சலைட்டுகளை வீழ்த்துகிற மாதிரி இதிலும்
natpu
வீழ்த்தப்படுவது நடக்கிறது என்றால் இந்த விஷயத்தில் – இஸ்லாமியர்களை வில்லன்களாகக் காட்டிச்சில தமிழ் சினிமாவில் கல்லா கட்டுவது மாதிரி - இதிலும் நக்சலைட்டுகள் சித்தரிக்கப்பட்டிருக்கிற இடத்தில் இடிக்கிறது.
அதைப்போல கொச்சையான பல வசனங்கள் படத்தில். ஜீவாவுடன் வேலை பார்க்கும் பெண் பத்திரிகையாளர் தனக்கு ஓரிரவுக்கு என்ன விலை பேசுவார்கள் என்று கேட்பதில் துவங்கி - '' இந்தா பார்த்துக்கடா '' என்று சிறு விடலைப்பையனுக்குத் தன்னுடம்பைத் திறந்து அதே பெண் காண்பிக்கிற காட்சி எல்லாம் ஓவர். திரைக்கதை - வசனத்தில் பங்கேற்றிருக்கிற எழுத்தாளர்களான சுபா இரண்டுபேரும் இதில் சில துண்டுக்காட்சிகளில் ஏன் வம்படியாகத் தலைகாட்டி சிறுவசனம் பேசி விழித்துவிட்டுஇப்படி நகரவேண்டும்? நடிப்பில் எல்.கே.ஜி அட்மிஷனா? இதையெல்லாம் மீறி இதமான பாட்டுக்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட அழகான லோகேஷன்கள் ( அது சரி - ஏதோ நம்மூர் தற்கொலைப்பாறை மாதிரி இருக்கிற உச்சிப்பாறை முனையில் போய்த்தான் இளம்ஜோடிகள் கொஞ்சி விளையாடுவார்களா? பரபரவென்று நழுவிப்போகிற திரைக்கதை – எடிட்டிங் எல்லாம் படத்தை' நவீன மசாலாவாக' கமர்ஷியலாக வெற்றிபெற வைத்துவிடும்.