சனி, 7 மே, 2011

கனிமொழி தினமும் ஆஜராக வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு

2ஜி வழக்கில் முன் பிணை கோரி கனிமொழி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை வருகிற 14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், அதுவரை அவர் தினமும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது. 

தமிழக முதல்வர் கருணாநிதியின் மகளும், திமுக மாநிலங்களபை உறுப்பினருமான கனிமொழியின் பிணை மனு மீதான விசாரணை இன்று இரண்டாவது நாளாக டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. 

அப்போது கனிமொழிக்கு பிணை வழங்க எதிர்ப்பு தெரிவித்து சிபிஐ வழக்கறிஞர் வாதிட்டார். 

அவரது வாதத்தை தொடர்ந்து பிணை மனு மீதான தீர்ப்பை வருகிற மே 14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி ஓ.பி.ஷைனி, அதே சமயம் கனிமொழி 14 ஆம் தேதி வரை தினமும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். 

நீதிபதியின் இந்த உத்தரவினால் அதிர்ச்சியடைந்த கனிமொழி,நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்குமாறு கோரினார்.சில தனிப்பட்ட காரணங்களால் தம்மால் மே 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் ஆஜராவதில் சிரமம் இருப்பதால், அந்த இரு தினங்களுக்காவது விலக்கு அளிக்க வேண்டும் என்று நீதிபதிக்கு கோரிக்கை விடுத்தார். 

ஆனால் அவரது கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி ஷைனி, கனிமொழி கட்டாயம் நீதிமன்றத்தில் தினமும் ஆஜராகியே தீரவேண்டும் என்று உத்தரவிட்டார். 

அதேப்போன்று கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் சரத்குமாருக்கும் இதே உத்தரவை நீதிபதி பிறப்பித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக