சனி, 7 மே, 2011

ஓராண்டுப் பயணம் - நூறாண்டு நெருக்கம்



பயணங்கள் பல வகையானாலும், ஒவ்வொன்றிற்கும் ஒவ்வோர் இலக்கு என்பதும் செல்லும் பாதை என்பதும் நிச்சயம் இருக்கும். இலக்குகள் அற்ற போக்கும், பாதைகள் வரையறுக்காத பயணமும் வெற்றிபெறாது என்பதற்கு வரலாற்றில் பல உதாரணங்கள் உள்ளன. இலக்குகளும் பாதைகளும் சரியாக அமைந்து பயணித்தால் வரலாற்றையே மாற்றும் பயணங்களாக அவை அமையும் என்பதனை வாஸ்கோடகாமா, கொலம்பஸ் போன்றவர்களின் பயணங்கள் மெய்ப்பித்து உள்ளன. ஓராண்டிற்கு முன் "புதிய தலைமுறை" வார இதழ் மூலமாக நாம் மேற்கொண்ட அப்படியொரு பயணம் தமது இலக்கான இளைய தலைமுறையைச் சரியாக அடைந்ததுடன், அவர்களையும் பயணத்தில் சேர்த்துக்கொண்டு சமூகத்தை மாற்றும் சமத்துவப் பயணமாகத் தொடர்கிறது. இன்று இரண்டாம் ஆண்டிற்குள் அடியெடுத்து வைத்து இளைய தலைமுறை இடையே ஒரு புதிய வரலாற்றைப் படைத்துள்ளது. இப்போது இது இளைய தலைமுறையை நோக்கிய பயணம் அல்ல, இளைய தலைமுறையுடன் இணைந்து உலகை மாற்றியமைக்க அவர்கள் தலைமையில் தொடரும் தன்னலமற்ற பயணமாகும். இப்பயணத்தைத் தொடங்கியவர்கள் என்ற பெயர் வேண்டுமானால் நம் இதழுக்குச் சேரலாமேயொழிய பயணத்தில் பங்கு கொண்டு, பாலங்கள் அமைத்து உறவுகொண்டு வெற்றியடையச் செய்த பெருமை நம் வாசகர்களையே சாரும். இந்தப் புதிய முயற்சிக்கு வாசகர்களாகிய நீங்கள் வரவேற்பும், ஆதரவும் அளித்து ஊக்கமூட்டி, உந்து சக்தியாய் விளங்கியதால்தான் இப்பயணத்தின் வெற்றி சாத்தியமாயிற்று. இதற்காக நன்றி கூறவேண்டும்என்று நா எழுந்தாலும், "நன்றி" கூறி உங்களை அந்நியப்படுத்தவும் "புதிய தலைமுறை" குடும்பத்திலிருந்து பிரித்துப் பார்க்கவும் கூடாது என்று நெஞ்சம் நினைவூட்டுகிறது.

கடந்து வந்த ஓராண்டுப் பயணத்தில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் 30 வாசகர்களைத் தேர்ந்தெடுத்து, புதிய தலைமுறையில் இதழாளர்களாக பரிணமிக்க வைத்திருக்கும் "புதிய தலைமுறை பத்திரிகையாளர் திட்டம்"; இளைஞர்கள் பொருளாதார நிலையிலும் முன்னேற்றம் காணவேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் தொடங்கப்பட்டு, தற்போதைய நிலையில் சுமார் 2,000 இளைஞர்கள் பயனடைய உள்ள "இளைஞர் சுயதொழில் மற்றும் வேலைவாய்ப்பு - விதைகள் திட்டம்"; சமூக நலனுக்காக உழைக்கும், சிந்திக்கும் வாசகர்களை அடையாளம் காட்டி அவர்களை ஓரணியாகத் திரளச்செய்த, "வாசகர் வட்டம்"; பொருளாதாரம் கல்விக்குத் தடையாக அமைந்துவிடக் கூடாது என்ற நோக்குடன் "புதிய தலைமுறை" பொறுப்பேற்று, பொறியியல், மருந்தியியல், கல்வியியல் போன்ற உயர்கல்வி பயிலும் வாய்ப்பினை 62 மாணவர்களுக்குப் பெற்றுத்தந்த "இலவச உயர்கல்வித் திட்டம்" போன்ற நம் பணிகள், "போதிப்பதை நாம் சாதிப்பவர்கள்" என்பதனை எடுத்துக் காட்டின. வாசகர்களின் கருத்துகளும் பின்னூட்டல்களும் நாம் சரியான வழியில்தான் செல்கிறோம் என்பதை உறுதிப்படுத்தும் வழிகாட்டிகளாகவும் திகழ்ந்தன. மேலும், இளைஞர்களுக்காகவே எப்பொழுதும் கனவு கண்டுகொண்டிருக்கும் இன்றைய நூற்றாண்டின் மாமனிதரான அப்துல் கலாம் போன்றவர்களையும் நம் இதழின் வழி வாசகர்களோடு உறவாட வைத்தது மகிழ்ச்சியைத் தருகிறது.

தீய எண்ணங்கள் கொண்டவர்கள் ஒன்று சேர்வதுஇயற்கை, எளிது. ஆனால், நல்லெண்ணம் படைத்தவர்கள் ஒன்று கூடுவது கடினம் என்ற கருத்து இப்பொழுதும் நிலவுகிறது. ஏனெனில், தீமை செய்வோர்களின் குறிக்கோள் அழிவு. அதை யார் செய்தாலும் சரி, அதனால் வரும் நன்மையோ தீமையோயாருக்குச் சென்றாலும் கவலையில்லை என்பதினால்தான். ஆனால், நல்லது செய்ய விரும்புவோர் சிலர் நற்பெயர் தமக்கே சேரவேண்டும் என்று நினைப்பதால் பொதுநலம் மீறி தன்னலம் செயல்படத் துவங்கி, அனைவரையும் இணைந்து செயல்படவிடாமல் தடுக்கின்றது. மக்கள் நலம்தான் முக்கியம், அதனால் வரும் நற்பெயர் யாருக்குச் சென்றாலும் கவலையில்லை என்று தனித்தனியாகச் செயல்படும் பொதுத்தொண்டுக் குழுக்கள் இணைந்துவிட்டால், அச்சக்திக்கு மண்ணில் இணையே கிடையாது. நாம் மேற்கொண்டுள்ள இப்பயணம் அப்படி ஒரு சக்தி உருவாக வேண்டும் என்பதற்கே பாடுபடும்.

காலங்களால் கழிந்தது ஓராண்டுதான் என்றாலும், நம் ஒருமித்த சிந்தனையால், பகிர்ந்து கொள்ளப்பட்ட கருத்துகளால், செல்லும் பாதையின் ஒற்றுமையால் நமக்குள்ளே ஒரு நூறாண்டு நெருக்கம் உருவாகி வளர்ந்துள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது. இது ஒரு தொடக்கம்தான்; பயணத்தின் ஆரம்பம்தான் இனியும் செல்ல வேண்டிய தூரம் அதிகம்; செலவிட வேண்டிய காலம் நெடிது; பகிர்ந்துகொள்ள வேண்டியவை பல. இந்தத் திண்மையுடன் நம் பயணம் தொடர்ந்தால் இளைய தலைமுறை மாற்றத்தின் மறு உருவாய் மாறுவதும், சமுதாயத்தை மாற்றுவதும் நிகழப்போகும் வரலாறு என்பதில் ஐயமில்லை. வரலாறு என்பது நடந்துமுடிந்த நிகழ்வுகளின் தொகுப்பு என்று நாம் நினைத்திருந்தாலும், அது வெற்றிகளையும், வெற்றி பெற்றவர்களையும் வர்ணிக்கப் பயன்படுமாறு வெற்றியாளர்களின் கோணத்திலிருந்து எழுதப்பட்டது என்பதுதான் உண்மையாகும். ஆதலால், நம்முடைய இன்றைய முயற்சிகள், போற்றும் நிகழ்வுகள் சரித்திரம் ஆக வேண்டுமானால் இளைய தலைமுறை ஒருங்கிணைந்து வெற்றி பெற்றாலேயே அது சாத்தியமாகும். வெற்றியாளர்களின் இன்றைய உலகில், நமது இளைய தலைமுறை தங்களின் தனிப்பட்ட வெற்றியை அடைந்து நாட்டில் மாற்றத்திற்கும் சமுதாயத்தின் ஏற்றத்திற்கும் தேவையான வெற்றியையும் வென்றிடட்டும். அதற்கு நம் "புதிய தலைமுறை" நண்பனாய், நல்லாசிரியனாய், நன்மை உரைக்கும் வழிகாட்டியாய் இளைய தலைமுறைக்குத் துணை நின்று பயணத்தைத் தொடரும்.

புதிய தலைமுறையின் பயணம் தொடரட்டும்! -பாரெங்கும் இளைய தலைமுறையின் புகழ் பரவட்டும்! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக